கருணாநிதி மறைந்த நிலையில் தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நாளை துவங்க இருக்கும் நேரத்தில் இன்று, “கருணாநிதியின் உண்மை விசுவாசிகள் என் பக்கம்தான் இருக்கிறார்கள்” என்று கூறி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிறார் மு.க. அழகிரி.
தென் மாவட்ட தி.மு.க.வை, மதுரையில் இருந்தபடி தன்கீழ் வைத்திருந்தவர் மு.க. அழகிரி. மத்திய அமைச்சராகவும், தென் மண்டல அமைப்புச் செயலாளராகவும் பெரும் சக்தியாக திகழ்ந்தவர்.
திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்ய புதிய ஃபார்முலாவை உருவாக்கி “பெயர்” பெற்றவர். இதன் பிறகு, “திருமங்கலம் ஃபார்முலா” என்ற புதிய வார்த்தைகளே உருவாகிவிட்டன.
ஆரம்பத்திலிருந்தே இவருக்கும், இவரது சகோதரரும் கட்சியின் செயல்தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கும் பனிப்போர் நடந்து வந்தது. ஒரு கட்டத்தில் வெடித்தது.
இதையடுத்து கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி , நிரந்தரமாக நீக்கப்பட்டார் அழகிரி. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டது.
ஆனாலும் அழகிரி சும்மா இருக்கவில்லை. அவ்வப்போது சரவெடிகளை கொளுத்திப்போட்டுக்கொண்டே இருந்தார். தி.மு.க.வை.. குறிப்பாக ஸ்டாலின் செயல்பாட்டை விமர்சித்தே வந்தார்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வில் ஸ்டாலின் குளறுபடி செய்துவிட்டதாகக்கூறி, 5 தொகுதிகள் கூட திமுகவுக்கு கிடைக்காது என்று அதிரடியாக பேட்டியளித்தார்.
அந்தத் தேர்தலில் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
அதன் பிறகு 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிரடியாக தனது கருத்துக்களை தெரிவித்தார்.
இடையில் அவர் வேறு கட்சிக்குப் போகப்போவதாக ஒரு யூகச் செய்தி உலவியது. அப்போது ‘நான் என்றும் திமுககாரன் தான்’ என்று சூளுரைத்தார்.
இடையில் அவரது தீவிர ஆதரவாளர்கள் பலர் தி.மு.க.வில் இணைந்து ஸ்டாலினிடம் ஐக்கியமாயினர்.
இதனாலோ என்னவோ சமீபகாலமாக அமைதியாக இருந்துவந்தார் அழகிரி.
இந்த நிலையில் தி.மு.க. தலைவரும் அழகிரி, ஸ்டாலின் ஆகியோரின் தந்தையுமான கருணாநிதி கடந்த ஏழாம் தேதி மறைந்தார்.
அப்போதிலிருந்தே, அழகிரியின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்ற கேள்வி அரசியல் மட்டத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
கருணாநிதி மறைவுக்கு பிறகு இறுதிச்சடங்கு உள்ளிட்ட நிகழ்வுகளில் அழகிரி, ஸ்டாலின் ஆகியோர் அருகருகே நின்றிருந்தனர். ஆனாலும் ஒருமுறை கூட இருவரும் முகம் கொடுத்து பேசிக்கொள்ளவில்லை என்பதும் அனைவராலும் கவனிக்கப்பட்டது.
ஆனாலும் அழகிரியை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்று குடும்பத்தினர், ஸ்டாலினிடம் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் உலவ ஆரம்பித்தன.
அழகிரி தரப்பில், மாநில அளவில் கட்சியில் முக்கிய பொறுப்பு வேண்டும் எனவும், கருணாநிதி மறைவால் காலியாக இருக்கும் திருவாரூர் தொகுதியில் வேட்பாளராக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், ஸ்டாலின் தரப்பு இதை விரும்பவில்லை என்று கூறப்பட்டது. அதாவது, கட்சிக்குள் அழகிரி வரவேண்டாம். அவர் அமைதியாக இருக்கட்டும் என்று சொல்லப்பட்டதாக தகவல் உலவியது.
ஆனால் அழகிரியை கட்சியில் சேர்த்து முக்கிய பொறுப்பு அளிக்க வேண்டும் எனறு குடும்பத்தினர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறL.
இதையடுத்து “ஸ்டாலின் தலைவர் ஆனால்தானே அழகிரி கட்சியல் முக்கிய பொறுப்பு அளிக்கும்படி குடும்பத்தினர் வற்புறுத்துவார்கள்? 14ம் தேதி கூடும் அவசர செயற்குழுவில், பொதுச்செயலாளர் அன்பழகனை தலைவராக்கிவிடலாம். இதன் மூலம் வாரிசு அரசியல் என்கிற விமர்சனத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தது போல் இருக்கும். அழகிரியை கட்சியில் சேர்த்து முக்கிய பொறுப்பு கொடுக்கவும் தேவையில்லை” என்று ஸ்டாலின் தரப்பில் ஆலோசிக்கப்பட்டதாக ஒரு தகவல் உலாவருகிறது.
ஆனாலும் குடும்பத்தினர் வற்புறுத்தல் காரணமாக, “அழகிரிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு அளிக்க முடியாது. வேண்டுமானால் திருவாரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கறோம்” என்று ஸ்டாலின் தரப்பில் சொல்லப்படதாக கூறப்படுகிறது.
ஆனால் கட்சியில் முக்கிய பொறுப்பை எதிர்பார்க்கும் அழகிரி, மோதலுக்கு தயாராகிவிட்டதாகவே தோன்றுகிறது.
இதன் வெளிப்பாடுதான், இன்று கருணாநிதி சமாதிக்கு வந்த அழகிரி, “என் அப்பாவிடம் கட்சி குறித்த எனது ஆதங்கத்தை வேண்டிக் கொண்டேன். கருணாநிதியின் உண்மையான விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் என் பக்கம்தான் உள்ளனர்” என்று அதிரடியாக தெரிவித்திருக்கிறார். இதை ஸ்டாலினுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கவேண்டியிருக்கிறது.
அதாவது, தனக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்படாவிட்டால் களம் இறங்கி அதிரடி ஆட்டம் ஆட அவர் முடிவு செய்துவிட்டதாகவே தோன்றுகிறது.
இந்த பரபரப்பான சூழலில் நாளை தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அவசர செயற்குழு கூட்டம் கூடுகிறது.
அங்கு என்ன முடிவெடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அழகிரியின் அரசியல் வியூகம் இருக்கும்.