மட்டக்களப்பு – கல்முனை வீதி, தாளங்குடா சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்முனை நோக்கிச் சென்ற காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சைக்கிளில் வந்து கொண்டிருந்த கூலித் தொழிலாளி மீது மோதி பின் வீதி மருங்கிலிருந்த மரம் மற்றும் கொங்கிறீட் கற்குவியல் என்பவற்றில் மோதி நின்றுள்ளது.
இந்த விபத்தில் காரை செலுத்திச் சென்றவரும், கூலித் தொழிலாளியும் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்பின் கூலித் தொழிலாளி மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.