மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஆதி, அதனைத் தொடர்ந்து ஈரம், அரவான், அய்யனார், ஆடுபுலி, யாகாவராயினும் நாகாக்க என பல படங்களில் நடித்தார். அதில் ஈரம், அரவான் படங்கள் மட்டும் அவர் பெயர் சொல்லும் படமான அமைந்தது. பிறகு சிறிது இடைவெளியில் மரகத நாணயம் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றாலும், அதன் பிறகு ஆதிக்கு படவாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் தெலுங்கு பக்கம் சென்ற ஆதி, அல்லு அர்ஜுன் படம் உட்பட சில படங்களில் வில்லனாக நடித்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்கிறார் ஆதி. சமீபத்தில் தெலுங்கில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற “ஆர் எக்ஸ் 100” என்ற படத்தின் தமிழ் பதிப்பில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இளைஞர்களை பெருமளவில் கவர்ந்த இந்த படம் தெலுங்கு திரை உலகில் வசூலில் சாதனை படைத்து இருக்கிறது. இந்த படத்தின் தமிழாக்கம் உரிமையை வாங்க பலத்த போட்டி ஏற்பட்டது. பிரபல திரைப்பட விநியோக நிறுவனமான ஆரா சினிமாஸ் பெற்றுள்ளது.
இதுகுறித்து ஆரா சினிமாஸ் நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ் கூறியதாவது:
” விநியோக துறையில் ஒரு நம்பகத்தன்மையான நிறுவனம் என்று பெயர் பெற்றாலும், திரைப்பட தயாரிப்பில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ராஜ தந்திரம் வீரா நடிக்கும் “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா, அதர்வா – ஹன்சிகா நடிப்பில் சாம் அன்டன் இயக்கும் 100 ஆகிய இரு படங்களும் படப்பிடிப்பு முடிந்து வெளிவரும் தருவாயில் உள்ளது. நடிகர் ஆதியுடன் எனக்கு நீண்ட நாட்களாக பழக்கம்.
நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆசை எங்கள் இருவருக்கும் இருந்தது. ஆனால் அதற்கேற்ற கதை கிடைக்கவில்லை.இதே நேரத்தில் தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 என்ற படம் வெளி வந்து பல சாதனைகளை முறியடித்து ஓடிக் கொண்டு இருந்தது. ஆதி என்னை அழைத்து படம் பார்க்க சொன்னார். எங்கள் இருவருக்கும் படம் மிகவும் பிடித்து இருந்தது. தமிழ் உரிமை வாங்க ஏகப்பட்ட போட்டி. தீவிர முயற்சியுடன் இந்தப் படத்தின் உரிமையை நான் பெற்றுக் கொண்டேன். இளைய சமுதாயத்தினருக்கு மிகவும் பிடிக்கும் கதை அம்சம் கொண்டு உள்ள படம் இது.
ரசிகர்களின் நாடி துடிப்பை அறிந்த ஒருவர் தான் இந்த படத்தை இயக்க வேண்டும். அதற்கான தேடல் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் கதாநாயகி பாத்திரம் மிகவும் சவாலானது. கதாநாயகி தேர்வு கூட நடைபெறவுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மற்ற தொழில் நுட்பக்கலைஞர்கள், மற்ற நடிக நடிகையர் தேர்வு நடைபெறும். செப்டெம்பர் மாதம் இறுதியில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.. ” என்று கூறினார்.