சுவிஸ் நகரங்களான சூரிச்சும் ஜெனீவாவும் வாழ்வதற்கு மிகச்சிறந்த ஐரோப்பிய நகரங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன.
Economic Intelligence Unit என்னும் அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில் 2018ஆம் ஆண்டிற்கான வாழ்வதற்கு மிகச்சிறந்த ஐரோப்பிய நகரங்கள் பட்டியலில் இந்த இரண்டு நகரங்களும் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பிடித்தாலும் உலக அளவில் முதல் பத்து இடங்களுக்குள் வர இயலவில்லை.
உலக அளவில் சூரிச் 15ஆவது இடத்திலிருந்து 11ஆவது இடத்திற்கும் ஜெனீவா நான்கு இடங்கள் முன்னேறி 14ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்திலிருந்த மெல்போர்னை பின்னுக்குத் தள்ளி, தரவரிசைப் பட்டியல் வரலாற்றிலேயே முதல் முறையாக வியன்னா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கோப்பன்ஹேகனும் வாழச் சிறந்த உலக நகரங்கள் பட்டியலில் முன்னேறியுள்ளதோடு முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடித்த ஒரே ஐரோப்பிய நாடு என்னும் புகழையும் பெற்றுள்ளது.
பட்டியலின் கடைசியில் இருப்பவை லாகோஸ், டாக்கா மற்றும் டமாஸ்கஸ் ஆகிய நகரங்கள் ஆகும்.
140 நகரங்கள் இந்த பட்டியலில் இடம் பிடிப்பதற்காக போட்டியிட்டன. ஐந்து அளவீடுகளின் அடிப்படையில் நகரங்கள் தரவரிசைப் படுத்தப்பட்டன.
அவையாவன உள்கட்டமைப்பு, நிலைத்தன்மை, கல்வி, சுகாதாரம், கலை மற்றும் கலாச்சாரம் ஆகும்.
அத்துடன் பயங்கர தீவிரவாதத் தாக்குதல்களுக்குப்பின் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புதலும் ஒரு முக்கிய அளவீடாகக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.