தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.சி.ஏ.என்.என் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் சமிரான் குப்தா இந்த தகவலை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று நேற்று (13.08.2018) செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், முதற்கட்டமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடிசா, பெங்காலி, தேவநாகரி, குஜராத்தி, குர்முகி போன்ற மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனை தொடர்ந்து பல்வேறு பிராந்திய மொழிகளில் இணையதளங்களுக்கு பெயரிடும் நடவடிக்கை விரைவில் ஏற்படுத்தப்படும்.
இதேவேளை தற்போது ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து இணையதள முகவரியை பெறும் வசதி மட்டுமே உள்ள நிலையில், மேற்குறிப்பிட்ட நடவடிக்கையின் மூலம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இணையத்தளங்களின் பெயர்களை தமிழிலேயே தட்டச்சு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலம் தெரியாத மக்களும் இணையத்தளத்தை பாவிக்கக்கூடிய வகையிலேயே இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், அண்மையில் கூகிளின் உத்தியோகபூர்வ மொழிகளில் தமிழும் இணைக்கப்பட்டு தமிழுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.