மலையகத்தில் பெரும்பாலான இடங்களில் கடும் மழை பெய்து வருகிறது.
இதனால் மேல்கொத்மலை, லக்ஷபான, கெனியன், நோர்ட்டன் பிரிஜ், மவுசாகலை மற்றும் பொல்கொல்ல ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழைக்காரணமாக மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் 3 வான்கதவுகளும், லக்ஷபான நீர்தேக்கத்தின் 2 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக கொத்மலை ஓயாவின் நீரமட்டம் அதிகரித்துள்ளது.
லக்ஷபான நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடையக் கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இந்த நீர்தேக்கங்களை அண்டிய மற்றும் தாழ்நில மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கொழும்பு கண்டி பிரதான வீதியின் கடவத்தை மற்றும் கிரிபத்கொடை பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
காவற்துறை போக்குவரத்து பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பல இடங்களில் பாதையில் வெள்ள நீர் நிறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், திம்புள்ள, பத்தனை, கிறேக்கிலி தோட்டத்தில் மண்சரிவு காரணமாக 5 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கிறேக்கிலி தோட்ட முதலாம் இலக்க லயன் குடியிருப்பின் பின்புறத்தில் சமயலறைப்பகுதியில் இன்று காலை இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்சரிவினால் ஐந்து வீடுகளின் சமயலறைப்பகுதிகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
எனினும் உயிராபத்துகள் எதுவும் இல்லையென பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
அத்துடன், கடந்த சில தினங்களாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடும் காற்றுடன் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அங்குள்ள எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தலவாக்கலை, லிந்துலை, டயகம, கொட்டகலை போன்ற பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருகிறது.
இன்று காலை 8 மணியளவில் அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை சென்.கிளாயர் பகுதியில் இடம்பெற்ற மண்சரிவினால் குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சீர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் களுத்துறை மாவட்டம் ஆகியவற்றின் சில இடங்களில் இன்றைய தினம் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் ஆகிய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.