யாழில் நபர் ஒருவர்மீதுள்ள பழியினை அவரது மகள்மேல் காட்டிய கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வர்த்தக நிலையமொன்றில் உணவுப் பண்டங்களைத் தந்தையார் கடனாகப் பெற்றுக் கொண்ட நிலையில் அந்தக் கடனை அவர் அடைக்காதிருந்தமையால் கோபமடைந்த வர்த்தக நிலைய உரிமையாளர் உணவுப் பண்டங்களைக் கடனாகப் பெற்றிருந்தவரின் 11 வயது மகளைக் கடுமையாகத் தாக்கிய கொடூர சம்பவம் யாழ்.பருத்தித்துறை குடத்தனை கரையூர்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வறுமைக்கோட்டுக்குட்பட்ட குறித்த சிறுமியின் தந்தையார் மேற்படி பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் உணவுப் பண்டங்களைக் கடனாகப் பெற்றுள்ளதாகவும், பல நாட்களாக வாங்கிய கடனை அடைக்காதிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கோபமடைந்த வர்த்தக நிலைய உரிமையாளர் நேற்றுச் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மாலை நேரத் தனியார் வகுப்பிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த கடன் பெற்றவருடைய மகளான சிறுமியைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.