சிறுத்தையை விறகால் அடித்து விரட்டிய வால்பாறை பெண்ணுக்கு தமிழக அரசு கல்பனா சாவ்லா விருது வழங்கி உள்ளது.
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள வால்பாறை பகுதியை சேர்ந்த பெண் முத்து மாரி. இவர் வசிப்பது மலைப் பகுதி என்பதல் அருகில் உள்ள காட்டில் இருந்து அடிக்கடி சிறுத்தைகள் ஊருக்குள் வருவது வழக்கம். வனத்துறையினர் அந்த சிறுத்தைகளை பிடித்து மீண்டும் காட்டுக்குள் விட்டு விடுவார்கள்.
முத்து மாரியும் அவரது 11 வயது மகள் சத்யாவும் கடந்த மே மாதம் 25 ஆம் தேதி அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு விறகு பொறுக்க சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த சிறுத்தை ஒன்று இவர்கள் மீது பாய்ந்தது. சத்யாவின் கழுத்தைக் கவ்விய சிறுத்தை அவரை காட்டுக்குள் இழுத்துச் செல்ல முயன்ற்து. முத்துமாரி தன் மகளை காக்க தன்னிடம் இருந்த விறகுக் கட்டையால் சிறுத்தையை தாக்கி சண்டை இட்டுள்ளார்.
முத்துமாரியின் அடி தாங்க முடியாமல் சத்யாவை விட்டு விட்டு சிறுத்தை காட்டுக்குள் ஓடி விட்டது. காயம் அடைந்த சத்யாவை ஊருக்குள் முத்துமாரி கொண்டு வந்தார். இதில் சத்யாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஊர் மக்கள் அவர்களை வால்பாறை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையில் இருவரும் உயிர் பிழைத்தனர்.
தமிழக அரசு வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு விருது அளித்து கௌரவிப்பது வழக்கமாகும். இந்த வருடத்துக்கான கல்பனா சாவ்லா விருது சிறுத்தையை விறகால் அடித்து விரட்டிய முத்து மாரிக்கு நேற்று முதல்வரால் வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு தமிழக மக்கள் தங்கள் பாராட்டுக்களை வலைதளங்களில் அளித்து வருகின்றனர்.