சமுர்த்தி திணைக்களத்திற்கு சொந்தமான 57 இலட்சம் ரூபா நிதியை திணைக்களத்தில் அபிவிருத்திப் பணியாளராக கடமையாற்றும் ஒருவர் கணக்காளரின் மாதிரிக் கையொப்பத்தை காசோலையில் இட்டு பணம் களவாடப்பட்டுள்ளது.
மேலும் தெரியவருவதாவது..
மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் உள்ள சமுர்த்தி திணைக்களத்தின் கணக்குப்பகுதியில் பணியாற்றும் இந்த சந்தேகநபர் திணைக்களத்தின் கணக்காளரின் கையொப்பத்தை போன்று காசோலையில் கையெழுத்து இட்டு அதனை வங்கியில் கொடுத்து பணத்தை பெற்றுச் சென்றுள்ளார்.
கொழும்பில் உள்ள சமுர்த்தி திணைக்களத்தில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த அலுவலத்தின் (திணைக்களத்தின் சராசரி நிலுவையை) மீதியை பரிசோதித்து கொழும்புக்கு அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது சமுர்த்தி திணைக்களத்தின் கணக்குக்கான வங்கிப்பணம் பரிசோதிக்கப்பட்டவேளை 57 இலட்சம் ரூபா காணாமற் போயுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கணக்காளரினால் மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனை விரிவாக ஆராய்ந்த பெரும்குற்றத் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி சமுர்த்தி திணைக்களத்தில் கடமையாற்றிய அபிவிருத்தி பணியாளர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
பணமோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் மேலும் 8 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபரை விசாரணைகளுக்கு உட்படுத்தியதுடன் அவரது சொந்தவூரான வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள கரவட்டி கிராமத்தில் சென்று பரிசோதனைகளை மேற்கொண்டது.இதன்போது நபரின் வீட்டில் உள்ள தென்னை மரத்தில் இருந்து 27 இலட்சம் ரூபா மீட்கப்பட்டுள்ளது.
இப்பணத்தை குறித்த சந்தேக நபர் உறவினர்கள் நான்குபேரின் கணக்கிலத்திற்கு பணத்தை பரிமாற்றம் செய்யப்பட்டு அதனை மீளப்பெற்று தன்னுடைய வீட்டில் உள்ள தென்னைமரத்தில் சூட்சூமமான முறையில் ஒழித்து வைத்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.