ஊடகவியலாளர் கீத் நொயரின் விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் அவரின் வீட்டுக்கே சென்று விசாரணை நடத்த எடுத்துள்ள தீர்மானம் குறித்து தமக்கு பிரச்சினையில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் கீத்நொயார் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் நாளை(வெள்ளிக்கிழமை) குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்கு சென்று விசாரணை குழுவினர் வாக்குமூலம் பெறுவதற்கு நடவடிக்கையெடுத்துள்ளனர்.
அது குறித்து எமக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. அவர் சுயேட்சையாகவே இதற்கு முன்வந்துள்ளார்.
எவ்வாறாயினும் அவரின் பதவி நிலை தொடர்பாக கவனம் செலுத்தப்பட வேண்டும். விசாரணைகளுக்காக அழைத்து அவரை அலைக்கழித்து அவரின் பதவியை அவமதிப்புக்கு உள்ளாகுவதை நாங்கள் விரும்பவில்லை.
கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டுள்ள மற்றும் அச்சுறுத்தப்பட்டுள்ள சம்பவங்களை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறான சம்பவங்களினால் நாட்டுக்கும் அவப்பெயர் ஏற்பட்டிருந்தது. இதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாகவே இருக்கிறோம். இவர்களுக்கு எதிரான நிச்சயமாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.