கடுமையாக சிதைந்த முகத்தை, மாற்று அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள பெண்ணொருவருக்கே, இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் கடந்த 2014 ஆம் ஆண்டு தற்கொலை செய்யும் நோக்கத்தில் தனது முகத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்.
இதனை அடுத்து அவரது நெற்றி, கண்கள், வாய், மூக்கு ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவர் உயிர் பிழைப்பாரா? என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு பல இடங்களிலும் இருந்து நன்கொடைகள் குவிந்து வந்தன. அவரது உயிர் காப்பாற்றப்பட்டாலும், அவரது முகம் சிகிச்சைக்கு பின்னர் சிதைந்த நிலையிலேயே காணப்பட்டது.
இதனால், யாராவது முகம் தானமாக கொடுத்தால் அந்தப் பெண்ணின் முகத்தை சீரமைக்க முடியும் என மருத்துவர்கள் கூறினார்.
இதனை அடுத்து அதிகமான போதைப் பொருள் உட்கொண்டதில் உயிரிழந்த பெண் ஒருவரின் முகம், தானமாக அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சுமார் 31 மணி நேரம் நீடித்த சத்திர சிகிச்சைக்குப் பிறகு சிதைந்த முகம் முகம் சீரமைக்கப்பட்டது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் பெரும் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
”தனக்கு பெரிய மன உறுதி கிடைத்துள்ளதாகவும், புதிய வாழ்க்கையை நடத்த தயாராக இருப்பதாகவும்” குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
இது மருத்துவத்தின் ஒரு மைல் கல்லாகவே அமைந்துள்ளது.