கனடாவில் சினிமா டைரக்டர் ஒருவர் தவறான விமானத்தில் ஏறி 1500 மைல் தூரம் பயணம் செய்துள்ளார். திசைமாறிய பயண அனுபவம் குறித்து அவரே தெரிவித்துள்ளார்.
டொரண்டோ:
கனடாவில் வின்னிபெக் நகரை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் பயட்சாயோ. சினிமா டைரக்டரான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை யெல்லோநைப் நகரில் இருந்து இனுவிக் என்ற இடத்துக்கு செல்ல விமானம் ஏறினார்.
ஆனால் அவர் நேர் எதிர் திசையில் அமைந்துள்ள இகாலுயிட் நகருக்கு செல்லும் விமானம் என்பது பின்னர் தெரியவந்தது.
அந்த விமானத்தில் 14 மணி நேரம் பயணம் மேற்கொண்ட பின்னரே விமான பணிப்பெண்ணிடம் பேசி அதை அவர் புரிந்து கொண்டார்.
விமானம் புறப்படும் முன்பு 4-வது வாசலில் காத்திருந்தார். அப்போது அங்கு 3 விமானங்கள் நின்று கொண்டிருந்தன. 3-வது விமானத்திற்கான கடைசி அழைப்பும் வெளியானது.
அந்த பரபரப்பான நிலையில் தான் பயணம் செய்ய வேண்டிய விமானத்தை விட்டு தவறாக வேறு விமானத்தில் ஏறியது தெரியவந்தது. அதற்குள் அவர் 1,500 மைல் தூரம் வேறு திசையில் பயணித்தார்.
தனக்கு நேர்ந்த விமான பயணம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றி இருக்கிறார். இந்த விவகாரத்தில் தனக்கு கோபம் இல்லை என்றும், இது முழுக்க முழுக்க தனது தவறே காரணம் என்றும் கூறி உள்ளார்.