கேரளாவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் நம்ம நயன்தாரா.
கேரளாவில் கடந்த 8 நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. 14க்கும் மேற்பட்ட மாவட்டங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து, அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை வெள்ளத்தால் உயிர் இழந்தவர்களுக்கு 4 லட்ச ரூபாயும், வீடு இழந்தவர்களுக்கு 8 லட்ச ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த நிவாரணத்துக்காக நிதி உதவி செய்யுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பலரும் கேரளாவுக்கு உதவிவரும் நிலையில், சினிமா பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர். கமல்ஹாசன் 25 லட்ச ரூபாய், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 25 லட்ச ரூபாய், விஷால் 10 லட்ச ரூபாய், ஸ்ரீபிரியா 10 லட்ச ரூபாய், தென்னிந்திய நடிகர் சங்கம் 5 லட்ச ரூபாய், ரோகிணி 2 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர். மேலும், விஜய் சேதுபதி 25 லட்ச ரூபாய், தனுஷ் 15 லட்ச ரூபாய், சித்தார்த் 10 லட்ச ரூபாய் அளித்துள்ளனர்.
இந்நிலையில், நயன்தாராவும் முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். நயன்தாரா நடித்துள்ள ‘கோலமாவு கோகிலா’, உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. படம் பார்த்த அனைவரும் நயன்தாராவின் நடிப்பைப் பாராட்டி வருகின்றனர் என்பதும் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.