“The Swissmakers” என்னும் திரைப்படம், ஒரு சுவிஸ் பாஸ்போர்ட் பெறுவது எவ்வளவு கடினம் என்பதை வேடிக்கையாக விளக்கிய ஒரு படம்.
இன்றும் சுவிஸ் குடியுரிமை பெறுவது கடினமான ஒன்றுதானா?
சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கான விதிமுறைகள் என்ன?
சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது போன்ற விடயங்களை எளிமையாக ஆனால் சுருக்கமாக கூறுகிறது இந்த வீடியோ.
ஒரு அயல் நாட்டவர் சுவிஸ் குடியுரிமை பெற வேண்டுமானால் முதலாவது சுவிட்சர்லாந்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும், வரி செலுத்த வேண்டும் மற்றும் சுவிஸ் அரசியல் சாசனத்தை மதிக்க வேண்டும் என்கிறார் சுவிஸ் குடியுரிமை கமிட்டியின் தலைவரான Gilles Schorderet.
ஜெனீவா அரசியல்வாதியான Florence Kraft கூறும்போது, சுவிஸ் பாஸ்போர்ட் என்பது ஒரு பரிசு அல்ல, சுவிஸ் குடியுரிமை பெற வேண்டுமானால் அதற்கான வரைமுறைகளை நீங்கள் சந்திக்க வேண்டும், நீங்கள் சுவிஸ் மக்களோடு கூடி வாழ வேண்டும் மற்றும் சுவிஸ் மொழியை பேச வேண்டும் என்கிறார்.
குடியுரிமை பெறுவதற்கான முதல் படி குடியுரிமை அலுலகத்திற்கு (Naturalization Office) வருகை புரிதல் ஆகும்.
அங்கு நீங்கள் குற்றச்செயல்கள் எதிலாவது ஈடுபட்டிருக்கிறீர்களா, எப்போதாவது தண்டனை பெற்றிருக்கிறீர்களா என்பது போன்ற முக்கியமான கேள்விகளோடு, சுவிஸ் நாட்டின் பாலாடைக்கட்டியின் பெயர் என்ன என்பது போன்ற கேள்விகளும் கூட கேட்கப்படலாம்.
அதாவது நீங்கள் சுவிட்சர்லாந்தின் கலாச்சாரத்தோடு ஒன்றி வாழ்கிறீர்களா என்பதை அறியும் கேள்விகள் கேட்கப்படும்.
குடியுரிமை பெறும் செயல் முறையில் ஒரு முடிவு எடுக்கப்படுவதற்கு முன், கடந்து வர வேண்டிய மூன்று அல்லது நான்கு படிநிலைகள் உள்ளன.
முதல் கட்ட நேர்முகத்தேர்வுக்குப் பின் குடியுரிமை தொடர்பான அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உங்களை உங்கள் வீட்டிற்கே வந்து சந்திப்பார்கள்.
நீங்கள் உண்மையிலேயே சுவிஸ் கலாச்சாரத்தோடு இணைந்து வாழ விரும்புகிறீர்களா, நீங்கள் சுவிட்சர்லாந்தை தெர்ந்தெடுத்ததன் காரணம் என்ன, உங்களுக்கு சுவிஸ் தேசிய கீதம் சரளமாக வருமா என்பதெல்லாம் உறுதி செய்யப்படுகிறது.
இந்த சந்திப்புகளுக்குப் பின் குடியுரிமை கமிட்டியின் முன் உங்களைப் பற்றிய அறிக்கை, மூடிய அறைகளுக்குள் சமர்ப்பிக்கப்படுகிறது.
அங்கு உங்களைப் பற்றிய விவரங்கள், உங்களை நேர் முகத் தேர்வுகள் செய்த பின் சேகரிக்கப்பட்ட விவரங்கள் அளிக்கப்பட்டபின் உங்களது விண்ணப்பத்தை அங்கீகரிப்பதா இல்லையா என்பது முடிவு செய்யப்படுகிறது.
இதில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் ஒரு விடயம், நீங்கள் சுவிஸ் மக்களோடு மக்களாக, சுவிட்சர்லாந்தை உங்கள் சொந்த நாடு போல கருதி, மதித்து வாழ்வீர்களா என்பதுதான்.
சுவிட்சர்லாந்தில் வந்து அமர்ந்து கொண்டு, ஒருவரோடும் ஒட்டாமல் தனித்தீவில் வாழ்வது போல் வாழும் ஒருவருக்கு சுவிஸ் குடியுரிமை வழங்குவது தனக்கு கடினமான காரியம் என்கிறார் Florence Kraft.