வடபகுதியில் வன்முறகளை கட்டுப்படுத்த பொது மக்கள் தொலைபேசி மூலமாகவோ அல்லது அலுவலகத்தில் நேரடியாக வருகைதந்தோ இரகசிய தகவல்களை வழங்க முடியும் என அறிப்விப்பு விடுக்கப்பட்ட அதேவேளை, ஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை காப்பாற்றித்தருமாறும் இளைஞன் ஒருவரின் தாயார் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுள்ளார்.
இந்தத் தகவலை வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
வாள்வெட்டு வன்முறை உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்தவாரம் முதல் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாகன பேரணி ஒன்று நடாத்தப்பட்டு தொலைபேசி இலக்கங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. வடமாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்ணாண்டொ தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
இச் செயற்பாட்டின் பின்னர் நடைபெற்ற முன்னேற்றம் தொடர்பில் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை நடத்தினார். இதன்போதே அவர் இந்தத் தகவலை ஊடகங்களுக்கு வெளியிட்டார்.
“தொலைபேசி இலக்கம் வழங்கப்படமைக்கு யாழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது வரை கணிசமான முறைப்பாடுகளும் தகவல்களும் இதன் மூலம் எமக்கு கிடைத்துள்ளது.
இதன் விளைவாக பல தகவல்கள் கிடைத்தவண்ணமுள்ளன. குறிப்பாக தாய் ஒருவர் அண்மையில் தொடர்புகொண்டு தனது மகன் ஆவா குழுவினருடன் இணைந்து செயற்படுவதாக தெரிவித்தார்.
மகனைக் காப்பாற்ற தான் முயன்றும் முடியாது போனதாக அந்தத் தாயார் மிகவும் மன வேதனையுடன் தெரிவித்தார். எப்படியாவது தனது மகனை அந்த குழுவிலிருந்து பிரித்துக் காப்பாற்றி தன்னிடம் ஒப்படைக்குமாறும் அவர் முறைப்பாடு வழங்கினார்.
இது போன்ற பல தகவல்கள் எமக்கு கிடைத்து வருகின்றன. அவற்றை இரகசியமான முறையில் விசாரித்து நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்துள்ளோம்” வெகு விரைவில் வன்முறைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்போம் என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.