தமிழகத்தில் கைப்பேசியில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த மனைவியின் காதை கணவன் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள பெருமாள் கோவில் காலனியில் வசிக்கும் தம்பதி முத்துராஜா(40) மற்றும் சந்தியா(40). இவர்களில் முத்துராஜா தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
சந்தியா தனியார் பள்ளி ஒன்றில் உதவி தலைமை ஆசிரியையாக பணிபுரிகிறார். இவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளார். சந்தியாவுக்கு பணியிடத்தில் நட்பு வட்டம் அதிகம். எனவே, தினமும் வீட்டுக்கு வந்ததும் கைப்பேசியில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
இது அவரது கணவர் முத்துராஜாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுக்கு வந்தால் பிள்ளையை கவனிக்க வேண்டும், பிற வேலைகளை செய்ய வேண்டும். எனவே நீண்ட நேரம் கைப்பேசியில் பேசாதே என பலமுறை முத்துராஜா தனது மனைவியை கண்டித்துள்ளார்.
ஆனால், சந்தியா அதை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒருநாள் இதுதொடர்பாக சந்தியாவை மீண்டும் முத்துராஜா கண்டித்துள்ளார். அப்போது சந்தியா அதனை கவனிக்காமல் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தது முத்துராஜாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற முத்துராஜா, அருகில் இருந்த அரிவாள் மனையை எடுத்து சந்தியாவின் காதை வெட்டினார். இதில் அவரது காது துண்டானதுடன், கன்னத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது.
சந்தியாவின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, சந்தியா அளித்த புகாரின் பேரில் முத்துராஜா கைது செய்யப்பட்டார்.