மறைந்த தமிழக முதல்வரும், அதிமுகவின் தலைவியான ஜெயலலிதா தான் ஆட்சி காலத்தில் இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி விமர்சனங்களை நேர்மறையானவைகளாக ஏற்றுக்கொள்ளாதவராகவே இருந்தார். அவரையே, அவரது அரசையோ விமர்சித்து எழுதிய, பேசிய ஊடகவியலாளர்கள் என்னவிதமான இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர் என்பதனை நாடறியும்.
அரசு அதிகாரத்தினை சர்வாதிகாரமாக பயன்படுத்திய ஜெயலலிதாவுக்கு எதிராக கடந்த 2000 ஆம் ஆண்டு காலக்கட்டத்தின் போது நடைபெற்று வந்த கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், பிப்ரவரி 2 – 2000 ஆம் ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதனையொட்டி அதிமுகவினரால் நடத்தப்பட்ட கலவரத்தில் தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி என்ற இடத்தில் கிருஷ்ணகிரி பையூரில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி மையத்துக்குச் சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேருந்தை எரித்ததில் பேருந்தில் சிக்கிய மாணவிகள் கோகிலவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகியோர் உடல் கருகி பலியாயினர்.
அரசு அதிகாரத்தினை தவறாக பயன்படுத்தி ஊழல் வழக்குகளில் சிக்கி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவருக்காக அப்பாவி மாணவிகள் மூவர் எரித்துக்கொள்ளப்பட்டது அப்போது தமிழகம் முழுவதும் மிகுந்த அதிர்வலைகளை கிளப்பியது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாது, ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்குத்தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இறுதியாகக் குற்றவாளிகள் மூவரும் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனுவை அனுப்பி வைத்தனர். கருணை மனுவை ஆய்வுசெய்த குடியரசுத் தலைவர், தூக்குத்தண்டனையை ரத்துசெய்து ஆயுள் தண்டனையாக மாற்றினார்.
பஸ் எரிப்பு வழக்கில் 10 வருடங்களுக்கு மேலாகச் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த காரணத்தினால், எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி அவர்களை விடுவிக்க அரசு முடிவு செய்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆக, அரசியலை மக்களுக்கான சேவையாக பார்த்திடாமல் தனது சுய லாபங்களுக்காக பயன்படுதியோர்களுக்காக அப்பாவி உயிர்கள் பலியாக்கப்படுவது தமிழக அரசியல் களத்தில் வாடிக்கையான ஒன்றாக உள்ளது.