முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணை செய்து முடிப்பதற்காக அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட விசேட நீதிமன்றம் இன்று திறந்துவைக்கப்படுகிறது.
விசேட நீதிமன்றத்தை திறந்து வைக்கும் நிகழ்வு, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தலைமையில் இடம்பெறுகிறது.அதற்கமைய முதலாவது வழக்கு விசாரணை எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதன்போது, அரசாங்க நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலக பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூவரது வழக்கு முதலாவதாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
பாரிய நிதி மோசடிகளை விசாரிக்கும் விசேட மேல் நீதிமன்றத்திற்கான நீதிமன்ற அமைப்புத் திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்டது.
இதன்பிரகாரம் உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்ட புதிய விசேட நீதிமன்றம் நாளாந்த அடிப்படையில் வழக்குகளை விசாரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.