யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை யின் ஆபத்தான கழிவுகளான உயிரி யல் கழிவுகளை அகற்றும் தனியார் நிறுவனம் அவற் றைச் சுத்திகரிப்புச் செய்யாது கடலுக்குள் நேரடி யாகக் கொட்டுகின்றது என்று யாழ்ப்பாணம் மாந கர சபையில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது.
அந் தக் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக யாழ். மாந கர சபை ஆணையாளரும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாநகர சபைின் அமர்வு நேற்று நடை பெற்றது. அதில் உறுப்பினர் ம.அருள்குமரன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் தெரிவித்ததாவது:
யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையின் உயிரியல் கழிவுகளை அகற்றும் பொறுப்பு தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் உயிரியல் கழிவுகளைச் சுத்தம் செய்யாது நேரடியாகக் கடலுக்குள் கொட்டுகின்றது.
இது மிக ஆபத்தான விடயம். இந்தச் செயற்பாட்டால் கடல் வளம் பாதிக்கப்படும். கடற்றொழில் செய்பவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
மருத்துவமனை நிர்வாகம் இந்த நிறுவனத்துக்கு அதிக கட்டணம் செலுத்துகின்றது. ஆனால் அந்த நிறுவனம் தனது பணியைச் சரியாகச் செய்யாது சிறைச்சாலைக்கு அண்மித்த பகுதி ஊடாகக் கழிவுகளை கடலுக்குள் கொட்டுகின்றது.
இந்த விடயத்தில் மாநகர சபையினர் நேரடியாகத் தலையிட முடியாதுள்ளபோதும், மருத்துவமனை நிர்வாகத்துடன் பேசி உரிய தீர்வை உடன் காண வேண்டும் -என்றார்.
சபை உறுப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டு உண்மையானது. நாமும் இது தொடர்பில் ஆராய்ந்து பார்ந்தோம். மருத்துவமனை உயிரியல் கழிவுகள் நேரடியாகக் கொட்டப்படுகின்றன.
இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளோம். அதற்கான சட்டவலு எம்மிடம் இல்லை என்று சபை ஆணையாளர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மருத்துவமனைப் பணிப்பாளருக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்படும் என்று சபை முதல்வர் தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கான பதிலைப் பெற யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தியைத் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும் அது பயனளிக்கவில்லை.