திருவண்ணாமலை கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு உதவி பேராசிரியரே பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த ஒரு இளம்பெண், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள வாழவச்சனூரில் உள்ள தமிழ்நாடு அரசு வேளாண் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதோடு, அரசு விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.
அப்போது, அதே கல்லூரியில் உதவி ஆசிரியராக பணிபுரியும் தங்க பாண்டி என்பவர் அவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இரவு நேரங்களில் மாணவிகள் தங்கியுள்ள விடுதிக்கு வந்தும் அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
எனவே, இதுபற்றி விடுதி வார்டன் புனிதா மற்றும் மைதிலி ஆகியோரிடம் அந்த மாணவி புகார் அளித்துள்ளார். ஆனால், பேராசிரியருக்கு ஆதரவாக பேசிய புனிதா, ஆசிரியரின் ஆசைக்கு இணங்குமாறு மாணவியை வற்புறுத்தியுள்ளார். அதோடு, இதை ஒத்துக்கொண்டால் பேராசிரியருக்கு நீ இரண்டாம் தாரமாகவும் வாழலாம் என மூளைச்சலை செய்ய முயன்றுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவி இதுபற்றி தனது பெற்றோரிடம் கூற, வாணாபுரம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. எனவே, இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவிகளை குறிவைத்து பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெற்றோர்களுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்தியியிருக்கிறது.