இங்கிலாந்தில், முன்னாள் காதலியுடன் மீண்டும் ஒன்றுசேர காதலியின் மாண்டுபோன தாயாரைப் போல் பாசாங்கு செய்த நபருக்கு நான்கு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யியோவில் (Yeovil) நகரத்தைச் சேர்ந்தவர் 51 ராய் மீட்வெல் (Roy Meadwell).
2016 டிசம்பரில், காதலி கே விம்பரியைத் (Kay Wimbury) தாக்கியதன் தொடர்பில் அவரைத் தொடர்புகொள்வதைத் தடை செய்து நீதிமன்றம் மீட்வெல்லுக்குக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால் அதை மீறி மீட்வெல், கடிதமொன்றை விம்பரிக்கு அனுப்பியிருக்கிறார்.
விம்பரியின் தாயாருடைய ஆவி எழுதியதைப் போல் அந்தக் கடிதம் இருந்தது.
விம்பரி, மீட்வெல்லைத் திருமணம் செய்ய மறுத்தது “மிகப் பெரிய தவறு” என்றும் தொலைபேசி மூலம் அவரோடு மீண்டும் தொடர்புகொண்டால் போதும் என்றும் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
ஆனால் அந்தக் கடிதத்தை மீட்வெல்தான் எழுதினார் என்பதை விம்பரி உடனே கண்டுபிடித்தார்.
தங்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த அந்தரங்க விவரங்கள் அந்தக் கடித்தில் இருந்ததே அதற்குக் காரணம் என்றார் விம்பரி.
நீதிமன்றத்தில் அந்தக் கடிதம் படித்துக் காட்டப்பட்டது.
அதனையடுத்து மீட்வெல்லுக்கு 4 மாதச் சிறைத் தண்டனை விதித்தது நீதிமன்றம்.
இருப்பினும் இரண்டு மாதங்களுக்கு அந்தத் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அந்த இரு மாதங்களுக்குள் மீட்வெல் மீண்டும் விம்பரியைத் தொடர்புகொண்டால் அவர் உடனடியாகச் சிறைக்கு அனுப்பப்படுவார்.<