மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை படமாக்குவதில் 3 டைரக்டர்கள் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.
பிரபல இயக்குனர் விஜய் இந்த படத்தை இயக்குவதாகவும் விஷ்ணு வர்த்தன் இந்தூரி தயாரிப்பதாகவும் அறிவிப்பு வந்தது.
தொடர்ந்து மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பெண் இயக்குனர் பிரியதர்ஷ்னியும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை படமாக்குவதாக அறிவித்தார்.
இவர்களைத் தொடர்ந்து பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கை கதையை படமாக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது.
இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படங்களில் நடிக்க ஜெயலலிதா வேடத்துக்கு நடிகைகள் தேர்வு நடக்கிறது. பாரதிராஜா இயக்கும் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க அனுஷ்கா, ஐஸ்வர்யாராய் ஆகியோரிடம் பேசிவருவதாக கூறியுள்ளனர்.
எம்.ஜி.ஆர்.வேடத்தில் கமல்ஹாசன், மோகன்லால் ஆகியோரில் ஒருவர் நடிப்பார் என்றும் கூறினர். மற்ற இரு படங்களிலும் ஜெயலலிதாவாக நடிக்க நயன்தாரா, திரிஷா, வித்யாபாலன், ரம்யா கிருஷ்ணன், மஞ்சிமா மோகன் ஆகியோரை பரிசீலிக்கின்றனர்.
படப்பிடிப்பை ஜெயலலிதா பிறந்த நாளான பெப்ரவரி 20 ஆம் திகதி தொடங்கவும் திட்டமிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க அவரது அண்ணன் மகன் தீபக் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதற்கு என்னிடமும் எனது சகோதரியிடமும் அனுமதி பெறவேண்டும். சசிகலாவிடமும் ஒப்புதல் பெறவேண்டும். ஆனால் இதுவரை யாரும் எங்களிடம் அனுமதி கேட்கவில்லை.
ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க நாங்கள் அனுமதி கொடுக்க மாட்டோம். மீறி படம் எடுத்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றும் தெரிவித்துள்ளார்.