அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடமாடும் வண்டியில் விதவிதமான தோசைகளை சுட்டு கொடுத்து இலங்கை தமிழர் ஒருவர் வாடிக்கையாளர்களை அசத்தி வருகிறார்.
இலங்கையை சேர்ந்தவரான திருக்குமார் பிழைப்பு தேடி கடந்த 2001ல் அமெரிக்காவுக்கு சென்று அங்கு சிறிய அளவிலான தோசை கடையை நியூயோர்க்கில் தொடங்கினார்.
விதவிதமான தோசைகளை சுவையாக வாடிக்கையாளர்களுக்கு திருக்குமார் சுட்டு கொடுக்க, பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களின் நாக்குகள் இவரது தோசைக்கு அடிமையாகி போனது.
மிகவும் குறைந்த விலையில் ருசியான உணவு வகைகளை கொடுப்பதால் இவர் கடையில் எப்போதும் கூட்டம் அதிகமாக உள்ளது.
அமெரிக்காவுக்கு பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் வருவதால் திருக்குமார் கடை குறித்த விவரங்கள் 42 புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன.
உலகிலேயே மிகப்பெரிய சைவ தோசை தள்ளுவண்டி கடை என்றால் அது திருக்குமாரின் கடை தான்.
மிகவும் தரமான உணவுகளை தயாரிக்கும் திருக்குமார் தோசை மட்டுமின்றி, வெங்காயம் மற்றும் உருளைகிழங்கால் செய்யப்பட்ட சமோசாக்களையும் தயாரிக்கிறார்.
மேலும் குளிர்பானங்களையும் திருக்குமாரே தயாரித்து விற்கிறார்.
திருக்குமாரின் உணவு கடைகளுக்கு சீனா, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் கிளைகள் உண்டு.
கடந்த 2007ல் சாலையோரக் கடைகளுக்கான போட்டியில் வெற்றி பெற்றதில் கிடைத்த பரிசு மற்றும் சான்றிதழ்களை தனது தள்ளுவண்டியில் வாடிக்கையாளர்கள் பார்க்கும் படி திருக்குமார் வைத்துள்ளார்.
பாண்டிச்சேரி மசால் கறி தோசை, தேங்காய் மற்றும் மிளகாய் பொடி தூவிய மலையாள தோசை ஆகியவை மிக இவர் கடையில் பிரபலமாகும். ஒரு தோசை 7 டொலருக்கு விற்கப்படுகிறது.
இவர் பற்றிய செய்தி முதன்முதலாக கடந்த 2002ஆம் ஆண்டு நியூயோர்க் மேகசின் பத்திரிகையில் வெளிவந்தது. அதன் பின்னர், பிரபல அமெரிக்க பத்திரிகைகளிலும் திருக்குமார் குறித்த செய்திகள் வந்துள்ளன.
இலங்கையில் டிராவல் ஏஜன்சி வைத்திருந்த திருக்குமார் முதன் முதலில் பணி நிமித்தமாக பாங்காக் செல்லும் போது ஒரு இடத்தில் சமையல் செய்துள்ளார்.
அதன் பிறகு பாங்காக் செல்லும் போதெல்லாம் சமையல் செய்து அதன் மூலம் அங்கு ஊதியமும் பெற்றுள்ளார்.