வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களில் ரக்ஷா பந்தன் விழாவும் ஒன்று. இந்த விழாவையொட்டி டில்லியில், பெண்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
ஆவணி மாதம் பௌர்ணமி தினத்தன்று ரக்ஷா பந்தன் கொண்டாப்படுவது வழக்கம். இந்த மாதம் வரும் 26ந்தேதி ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட உள்ளது.
சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் இந்த விழாவின்போது, பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் கையின் மணிக்கட்டில் ராக்கி கட்டி சகோதர பாசத்தை வெளிபடுத்துவார்கள்.
பின்னர் சகோதரர்கள், அந்த பெண்மணிக்கு தங்களால் முடிந்த அன்பு பரிசை வழங்குவார்கள். இது இந்துக்கள் பண்டிகை என்றாலும், வேறு பல மதத்தை சேர்ந்த சமுதாயத்தினரும் கொண்டாடி வருகின்றனர்.
தென்னிந்தியாவிலும் வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியை முன்னிட்டு வடக்கு ரயில்வே டில்லி மண்டலம் பிரிவில் பெண்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவித்துள்ளது. அதற்கு “ரக்ஷா பந்தன் லேடிஸ் சிறப்பு ரயில்” என பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த ரயில்கள் டில்லியில் இருந்து பல்வல், காஸியாபாத், பானிபட், போன்ற பகுதிகளுக்கு செல்லும் என கூறப்பட்டு உள்ளது.