கேரளாவின் வெள்ள நிவாரணத்துக்காக ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவித்த ரூ.700 கோடி நிதியுதவியை ஏற்க மத்திய அரசு மறுத்துள்ளது.
வெளிநாட்டு நிதிபெறும் விஷயத்தில் முந்தைய கொள்கைகளை அரசு பின்பற்றும், மீட்பு மற்றும் புனர்வாழ்வு தேவைகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர், சர்வதேச நிறுவனங்கள் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கோ அல்லது இந்திய பிரதமர் நிவாரண நிதிக்கோ அனுப்பலாம் என்று இந்திய அரசு விளக்கம் கூறி உள்ளது.
இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று செய்தியாளர்களிடம், “ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சிக்கு கேரள மக்கள் அதிகமாக பங்களித்துள்ளனர். அதன் காரணமாகவே அந்த நாடு கேரளாவுக்கு அதிக நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது. அந்த நாட்டை வேறு நாடாக கருத முடியாது. இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்” என்று தெரிவித்தார்.