கேரள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அம்மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக கேரளாவின் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டன. பல லட்சம் மக்கள் வீடுவாசலை இழந்து நிவாரண முகாம்களில் தங்கினர். இன்னமும் பலர் முகாம்களில் தங்கியுள்ளனர்.
அவர்களுக்கு இந்தியா முழுமையில் இருந்தும் மாநில அரசுகள், தனியார் அமைப்புகள், கட்சிகள், பிரபல நடிகர்கள், தனிப்பட்ட நபர்கள் என பல்வேறு தரப்பினர் நிதி மற்றும் பொருள் உதவி செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் செயல்படும் நாம் தமிழர் கட்சியும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தது.
இந்த நிலையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கேரளாவிற்கு வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்க சுமார் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் நூறு தொண்டர்கள் சென்றனர்.
நேற்றிரவு அவர்களை வழிமறித்து கைது செய்த கேரள காவல்துறையினர், கோட்டையம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். நேற்று விடிய விடிய அவர்களிடம் விசாரணை நடந்தது.
நிவாரணப் பொருட்களை ஏற்றி சென்ற வாகனங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உருவப்படம் பொறிக்கப்பட்ட பதாகைகள் இருந்ததைக் காரணம்காட்டி அங்கிருந்த பாரதிய ஜனதா கட்சியினர் நிவாரணப் பொருட்களை வழங்க எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதையடுத்து கேரள காவல்துறையினர் சீமான் உள்ளிட்டோரை கைது செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், நாம் தமிழர் கட்சியினர் கொண்டு வந்த பொருட்களில் சந்தேகம் இருப்பதால் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கேரள காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.