பிரபாகரன் கொல்லப்பட்டபோது அவரை எனது தந்தையின் இடத்திலும், அவருடைய பிள்ளைகளை எனது இடத்திலும் வைத்து பார்த்தேன்’’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உருக்கமாக பேசினார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, புகழ்பெற்ற லண்டன் பொருளாதார பள்ளியில் இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடையே கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது:அடுத்தாண்டு மக்களவை தேர்தலில் ஒருபுறம் பாஜ.வும், மறுபுறம் அனைத்து எதிர்க்கட்சிகளும் அடங்கிய கூட்டணியும்தான் இருக்கும். இதில், எந்த மாற்றமும் இல்லை. நாட்டில் இதுவரை இல்லாத வகையில் கல்வி நிறுவனங்கள் மீது மத்திய பாஜ அரசு ஆதிக்கம் செலுத்துகிறது.
அரசியல் சாசனம் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படுகிறது. இவற்றை நாங்கள் பாதுகாப்போம். நாடெங்கிலும் பரப்பப்படும் நஞ்சை தடுத்து நிறுத்துவதுதான் முதல் வேலை என்பதை நானும், அனைத்து எதிர்கட்சிகளும் உணர்ந்துள்ளோம்.
அடுத்தாண்டு மக்களவை தேர்தலில் பாஜ.வை வீழ்த்துவதே காங்கிரசின் முதல் வேலை.நான் முன்பே கூறியபடி, நானும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவன்தான். அதன் வலி எனக்கு புரியும். அதனால், இந்த பூமியில் எந்த வடிவத்தில் வன்முறை நடத்தப்பட்டாலும் அதை தடுப்பேன். யார் துன்புறுத்தப்பட்டாலும் மிகவும் வருத்தப்படுவேன்.
அதனால்தான், 1984ல் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையை 100 சதவிகிதம் எதிர்க்கிறேன். அதில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைப்பதை 100 சதவீதம் ஆதரிக்கிறேன். இதில் நான் தெளிவாக உள்ளேன்.
நான் மிகவும் விரும்பியவர்கள் கொல்லப்பட்டதை நான் பார்த்துள்ளேன். இதேபோல், எனது தந்தையை கொன்றவரும் கொல்லப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன்.
பிரபாகரன் கொல்லப்பட்ட போது அவரை எனது தந்தையின் இடத்திலும், அவருடைய குழந்தைகளை எனது இடத்திலும் வைத்து பார்த்தேன். வன்முறையின் வலியை அதிகம் பேர் நேரிடையாக உணர்வதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, லண்டனில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இங்கிலாந்து அரசியல் தலைவர்களுடனும் ராகுல் கலந்துரையாடினார்.