சென்னை
அடுத்த 10 நாட்களுக்கு சென்னை உட்பட தமிழகம் முழுதும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் என்னும் பெயரில் முகநூலில் எழுதி வரும் பிரதீப் ஜானின் வானிலை முன்னறிவிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவர் அறிவிப்பது படியே தட்பவெட்ப நிலை அமைவதால் மக்கள் அவருடைய முகநூல் பதிவை விரும்பி படித்து வருகின்றனர். அவர் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “அடுத்த 10 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய நல்ல வாய்ப்புள்ளது. இந்த மழையானது பருவமழை இல்லாத இடங்களிலும் 10 நாட்களுக்கு இருக்கக் கூடும். அதிமான மழை கடந்த வாரத்தில் மேற்கு தமிழகத்தில் பெய்தது. இனி கிழக்குப் பகுதியில் மழை பெய்ய உள்ளது.
அனேகமாக நாள் தோறும் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து இடியுடன் கூடிய மழை பெய்யும். வட சென்னையில் இன்று இரவு முதல் மழை இருக்கும். காஞ்சிபுரம் பகுதியில் இருந்து மேகங்கள் நகர்வதால் தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்யக் கூடும்.
சென்னையில் கன மழை பெய்த போதிலும் இந்த மழை வெள்ளத்தை உண்டாக்காது. பெங்களூருவிலும் இதே போல் கடும் மழை பெய்தாலும் வெள்ளம் வர வாய்ப்பில்லை. கேரளாவில் தற்போது மழை நின்றுள்ள போதிலும் மீண்டும் மழை பெய்யும். ஆயினும் மழையினால் இனி கேரளாவுக்கு அச்சுறுத்தல் இருக்காது.” என பதியப்பட்டுள்ளது.