ஒரு தேசிய வீரனின் நிகழ்வில் அதிக மக்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை.
எதிர்காலத்தில் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன்.
வவுனியா நகர சபை மண்டபத்தில் மாவீரன் பண்டாரவன்னியன் நினைவு நிகழ்வு நேற்றுக் காலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
குரல் எழுப்பாது, போராடாது இருந்துகொண்டு உரிமை கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த நாட்டில் 29 இனக் குழுமங்கள் உள்ளன. அவை தமது உரிமைகளைப் போராடிப் பெற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களும் தமக்கான உரிமைகளைப் போராடியே பெற்றுக் கொள்ள வேண்டும். அழுத பிள்ளைக்கே பால் கிடைக்கும் என்பது என்பது எளிமையான உண்மை.
இது ஒரு பல்லின நாடு, பல மொழிகள் பேசும் நாடு என்பதை ஏற்றுக்கொண்டாலே இலங்கை ஒரே நாடு என்ற அர்த்தம் பொருந்தும். தமிழர்களின் நியாயமான அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய ஒரு தீர்வுத் திட்டத்தை அரசு வழங்க வேண்டும் என்று கோருகின்றேன்.
ஒரு இனத்துக்கும், மதத்துக்கும் உரிய நாடாகவிருந்தால் இது இரண்டு நாடாகி விடும். அவ்வாறான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திவிடவேண்டாம் என்று பேரினவாதிகளை நான் கேட்கின்றேன். நேற்று கூட மாகாண சபை தேர்தலுக்கான எல்லை வரம்பு அறிக்கை தயாரிக்கப்பட்டு எம் மீது திணிக்கப்பட்டது. அந்த முயற்சியை நானும் சில தமிழ்க் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமில்லாமல் முறியடித்திருந்தோம்.
அந்த அறிக்கை நாடாளுமன்றத்திலே நிறைவேற்றபட்டு இருக்குமானால் மாகாண சபை முறைமை கேள்விக்குறியாக்கப்படிருக்கும். மாகாண சபை தமிழ்மக்களின் வேணவாக்களைப் பூர்திசெய்யும் கட்டமைப்பு அல்ல. புதிய அரசமைப்பு வருமா இல்லையா என்று எனக்குத் தெரியாது. வந்தால் எமக்கு நல்லது. வரும் என்று நான் சொல்லமாட்டேன். அதற்காக நாம் முயற்சி செய்யாமல் இருக்க முடியாது என்றார்.
இந்த நிகழ்வில் நூற்றுக்கும் குறைவானோரே கலந்து கொண்டிருந்தனர். நகரசபை மண்டபத்தில் பெரும்பாலான ஆசனங்கள் வெறுமையாக இருந்தன<