பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் டாப் 10 சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் சல்மான் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்க நடிகர் ஜார்ஜ் க்ளூனி $239 மில்லியன் டாலர் சம்பளம் பெற்று முதலிடம் வகிக்கிறார். இந்திய ரூபாய்க்கு க்ளூனியின் சம்பளம் ரூ.20 கோடியாகும். இதில் பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார் $40.5 மில்லியன் டாலர் (ரூ.4 கோடி 50 லட்சம்) பெற்று 7வது இடத்திலும், சல்மான் கான் $38.5 மில்லியன் டாலர் (ரூ.4 கோடி) பெற்று 9வது இடத்திலும் உள்ளனர்.
கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 1 முதல் 2018ம் ஆண்டு ஜூன் 1 வரையிலான கால அடிப்படையில் இந்த பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் அந்தந்த நடிகர்களின் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்களின் வசூலை பொருத்து அமைந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் ‘டாய்லெட் ஏக் ப்ரேம் கதா’ மற்றும் ‘பேட்மேன்’ ஆகிய படங்கள் மூலம் அவரது வருமானம் அதிகரித்திருப்பதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நடிகர் சல்மான் கான் நடித்த ’டைகர் ஜிந்தா ஹை’ மற்றும் ‘ரேஸ் 3’ படத்தின் மூலம் வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் ஜார்ஜ் க்ளூனியை தொடர்ந்து டுவைன் ஜான்சன் 2வது இடத்திலும், ராபர்ட் டவுனி ஜூனியர் 3வது இடத்திலும், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் 4வது இடத்திலும், ஜாக்கி சான் 5வது இடத்திலும், வில் ஸ்மித் 6வது இடத்திலும், ஆடம் சாண்ட்லர் 8வது இடத்திலும், கிறிஸ் ஈவான்ஸ் 10வது இடத்திலும் உள்ளனர்.