நாடு பூராகவும் உள்ள 2000 வைத்திய ஆலோசகர்கள் வடக்கு-கிழக்கில் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்ற விரும்பாது கொழும்பு, கண்டி, காலி மற்றும் மாத்தறை போன்ற பண வசதிகள் உள்ள நகரங்களில் பணியாற்ற விரும்புவதால் இது அரசுக்கு பெரும் சவாலாகவும் தலையிடியாகவும் உள்ளது.
இவ்வாறு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் பற்றி ஆராய்வததற்காக அங்கு சென்றார். இந்த விஜயத்தின் இறுதியில் வைத்தியசாலையின் ஊழியர்களின் மத்தியில் உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.
மேலும், அவர் அங்கு கூறுகையில்;
சில அரசியல்வாதிகள் முஸ்லிம்-தமிழர் என்ற அடிப்படையில் எனக்கு எதிராக இனவாதத்தை தூண்டி வருகின்றனர்.என்னிடம் தமிழ்-முஸ்லிம் என்ற பாகுபாடு கிடையாது. கிழக்கு மாகாணத்தில் தெஹியத்தக்கண்டி, பாணம முதல் குச்சவெளி வரை அனைத்து வைத்தியசாலைகளையும் அபிவிருத்தி செய்து வருகின்றேன். என்னிடம் உதவி கேட்டு வருகின்ற அனைத்து வைத்தியசாலைகளுக்கும் நான் உதவியை செய்துகொண்டுதான் இருக்கின்றேன்.
நான் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை நல்ல நிலையில் இருக்கின்றது என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தேன். இங்கு வந்து பார்த்ததும் ஏமாந்துவிட்டேன்.இந்த வைத்தியசாலையின் நிலமையைக் கண்டு நான் மிகவும் கவலையடைகிறேன். இங்கு காணப்படுகின்ற அத்தனை குறைகளையும் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
வைத்தியர்களின் தட்டுப்பாடுகளுடன்தான் எமது சுகாதார சேவை இயங்குகிறது. வருடம் ஒன்றுக்கு 1200 வைத்தியர்களை உருவாக்குகின்றோம். அவர்களுள் 200 பேர் மாயமாக மறைந்துவிடுகின்றனர். இருக்கின்ற ஆயிரம் பேரை தேவைக்கு ஏற்ப நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைகளுக்கு பிரித்துக் கொடுக்கின்றோம்.
அப்படிப் பிரிக்கும்போது வைத்திய சங்கங்கள் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்தும். அப்படிச் செய்ய முடியாது இப்படிச் செய்ய முடியாது என்று கூறி தடையை ஏற்படுத்தும். கிட்டத்தட்ட 150 வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களின் தட்டுப்பாடுகள் உள்ளன.
நாடு பூராகவும் 2000 வைத்திய ஆலோசகர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் கொழும்பு,கண்டி,காலி மற்றும் மாத்தறை போன்ற பண வசதிகள் உள்ள நகரங்களில் பணியாற்றவே விரும்புகின்றனர். வடக்கு-கிழக்கிற்கு வெளியேவே வேலை செய்வதற்கு விரும்புகின்றனர்.இது அரசுக்கு பெரும் சவாலாகவும் தலையிடியாகவும் உள்ளது.
இப்போது மேலதிகமாக 300 வைத்திய ஆலோசகர்களை உள்ளீர்த்துள்ளோம். அவர்கள் படித்து முடித்து வருவதற்கு மூன்று வருடங்கள் செல்லும்.அப்படி வந்தாலும் அவர்கள் அப்படியே வெளிநாடுகளுக்கு பெட்டியைக் கட்டிவிடுவர்.
இன்று இருதய சத்திர சிகிச்சைக்காக 2000 நோயாளர்கள் மரணத்தை கையில் பிடித்துக்கொண்டு காத்துக்கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். இவ்வாறான கஷ்டத்தின் மத்தியில் நாம் முடியுமானவரை சிறந்த சுகாதார சேவையை ஆற்றி வருகின்றோம்.மருந்து பொருட்களின் வேலைகளை குறைத்துள்ளோம்.<