வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் என்ற கோதாவில் மாகாணசபைக்குள் குழப்பங்களையும், சச்சரவுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சி.தவராசாவிற்கு முகத்திலறைந்தாற் போல கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் வடக்கு பிரதம செயலாளர் அ.பத்திநாதன்.
வடக்கு அமைச்சரவை மாற்றத்தை சர்ச்சையாக்கும் விதமான முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். ஏற்கனவே முறையான அதிகாரங்கள் இல்லாத முதலமைச்சர் பதவியை, டெனீஸ்வரன் வழக்கின் மூலம் மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில், தனது தேர்தல் அரசியலை ஆரம்பித்துள்ள சி.தவராசா வாரத்திற்கு நான்கு கடிதங்களை பல்வேறு தரப்பிற்கும் எழுதிக் கொண்டிருக்கிறார். அதிலொன்றாக, வடக்கு அமைச்சரவை சட்டபூர்வமற்றது, தற்போதைய அமைச்சர்களிற்கான கொடுப்பனவை நிறுத்தி வைக்க வேண்டும் என பிரதம செயலாளரிற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பிரதம செயலாளர் பதிலனுப்பியுள்ளார். மாகாண அமைச்சர்கள் ஐவருக்கும் சம்பளம் வழங்க வேண்டும். தற்போதைய அமைச்சர்களே அரசிதழில் அமைச்சர்களாக குறிக்கப்பட்டவர்கள். நீதிமன்ற விவகாரத்தில் தலைமைச் செயலாளர் ஒரு பிரதிவாதியல்ல. இதனால் நீதிமன்ற தீர்ப்பு தமைச் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்படவில்லை. ஆளுனர் அறிவித்தால் மாத்திரமே சம்பளத்தை இடைநிறுத்த முடியும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சர்களின் சம்பளம் வழங்குவதா இல்லையா என்பது குறித்து ஆளுனரிடம் தலைமைச்செயலாளர் ஆலோசனை கேட்டதை தமிழ்பக்கம் அறிந்தது. தற்போதைய அமைச்சரவைக்கு சம்பளம் வழங்க ஆளுனர் அனுமதித்துள்ளார்.