நாம் இந்த உலகத்தில் எவ்வளவு வருடம் உயிர் வாழ்வோம் என்பதை அறிந்து கொள்ள அனைவருக்கும் ஒரு ஆர்வம் இருக்கும். அதற்காக நாம் பல முயற்சிகளையும், பல மருத்துவ பரிசோதனைகளையும் செய்திருப்போம். ஆனால், இந்த எளிமையான வழிமுறை உங்களுக்கு தெரிந்திருக்காது.
அப்படி என்ன எளிமையான வழிமுறை என்று நினைக்கிறீர்களா?. அமெரிக்காவில் உள்ள யாலே பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வியக்க வைக்கும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் ஆராய்ச்சியின் படி, ரத்த பரிசோதனை மூலமாக மனிதனின் உண்மையான வயது, ஆயுட்காலம் எவ்வளவு? எவ்வளவு நாட்கள் வாழ முடியும் என்பதை கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சிக்கு அமெரிக்காவின் தேசிய சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையில் ஆவணப்படுத்தப்பட்ட குறிப்புகளில் இருந்து முக்கியமான 42 மருத்துவ நடவடிக்கைகளை பகுப்பாய்விற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த குறிப்புகள் பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை ஆய்வு செய்து எடுக்கப்பட்டவை ஆகும். 1988 மற்றும் 1994 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 10,000 பேரின் ரத்த மாதிரிகளில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் குழு தேர்வு செய்தது. அதில் அவர்களுக்கான இறப்பு அபாயத்தை தீர்மானித்த காரணிகள் அடையாளம் காணப்பட்டன.
இதேபோல் 1999 மற்றும் 2010 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 11,000 பேர் தேர்வு செய்யப்பட்டு வாழ்க்கை முறை, மருத்துவ வரலாறு போன்ற காரணிகள் பதிவு செய்யப்பட்டன. குளுகோஸ் அளவுகள், வெள்ளை ரத்த அணுக்கள், உள்ளிட்ட 9 காரணிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன் மூலம் வயது மற்றும் இறப்புக்கு காரணமாக காரணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் சிறப்பானதாக இருந்ததாக ஆய்வு குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இறப்புக்கான காரணிகளை கண்டறிந்து பிரச்னை ஏற்படுவதற்கு முன்பாக அவற்றுக்கான சிகிச்சையை அளிப்பதன் மூலம் ஆயுள் காலத்தை அதிகரிக்கலாம்.