தாயும் மகனும் உந்துருளியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது காட்டு யானை ஒன்று வழிமறித்துத் தாக்கியுள்ளது.
இதனால் தாயும் மகனும் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரியபுல்லுமலை அம்பகஹவத்தை காட்டுப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மயிலம்பாவெளியைச் சேர்ந்த 65 வயதான தாயும் 32 வயதான மகனும் காயமடைந்துள்ளனர்.
அம்பகஹவத்தை கிராமத்திற்குச் சென்று கொண்டிருக்கும் போது வழியில் குறிக்கிட்ட காட்டு யானை துரத்தித் துரத்தித் தாக்கியுள்ளது. இதனால் உந்துருளியில் பயணித்த இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உந்துருளியில் பின்புறம் அமர்ந்து பயணித்த தாயின் இடுப்புப் பகுதியில் யானை தனது தும்பிக்கையால் ஓங்கி அறைந்துள்ளது. இதனால் உந்துருளியை ஓட்டிச் சென்ற மகன் நிலைதடுமாறியதால் இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
எவ்வாறாயினும் அந்த யானை அவ்விடத்தை விட்டு நீங்கிச் சென்றதனால் இருவரும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.