இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவருமான 21 வயது வீரர் தருண் அய்யாச்சாமி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பந்தயத் தொலைவை 48.96 விநாடிகளில் அடைந்து அய்யாச்சாமி 2-வது இடத்தைக் கைப்பற்றினார்.
அய்யாச்சாமிக்கு 8 வயது இருக்கும் போது, அவரின் தந்தை காசநோயால் உயிரிழந்தார். அய்யாச்சாமியையும், அவரின் சகோதரியையும், அவரின் தாய்தான் இளவயதில் இருந்து கஷ்டப்பட்டு வளர்த்துப் படிக்க வைத்தார்.
பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் தருணின் தாயார். வெள்ளி வென்ற மகிழ்ச்சியால் இருந்த தருண் அய்யாச்சாமி அளித்த பேட்டியில்,
என்னுடைய சிறுவயதிலேயே என் தந்தை இறந்துவிட்டார். தந்தையின் முகத்தைக்கூட நான் ஆழமாகப் பார்த்தது இல்லை. என்னையும், என் சகோதரியையும் கஷ்டப்பட்டு வளர்த்தவர் என் அம்மாதான்.
எங்களை வளர்க்க எங்கள் அம்மா பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளார். பல்வேறு சிரமங்களையும், போராட்டங்களையும், பணப் பிரச்சினைகளையும் என் அம்மா சந்தித்து எங்களை வளர்த்தார். இப்போது நான் வென்ற இந்த வெள்ளிப் பதக்கத்தை என் அம்மாவுக்கு அர்ப்பணிக்கிறேன்.
என்னுடைய லட்சியம், நல்ல வேலைக்குச் சென்று என் அம்மாவை நன்றாகப் பராமரிக்க வேண்டும் என்பதுதான். நல்ல வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.