தமிழகத்தில் பொலிசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
சென்னை திருவேற்காடு பகுதியில் உள்ள செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் ரேணுகா. இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அமிர்தவள்ளி என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
எனவே, இதுதொடர்பாக திருவேற்காடு காவல் நிலையத்தில் ரேணுகா மீது அமிர்தவள்ளி புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ரேணுகா விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
அதன் பின்னர் நேற்று காவல் நிலையம் வந்த ரேணுகா, திடீரென மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனைக் கண்ட பொலிசார் உடனடியாக தீயை அணைத்து, ரேணுகாவை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ரேணுகா மரணமடைந்துள்ளார். பொலிசார் அமிர்தவள்ளி குடும்பத்திற்கு ஆதரவாக செயல்பட்டது தான் ரேணுகாவின் தற்கொலைக்கு காரணம் என அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.