கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூகுள் நிறுவனம் ஏழு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது.
கேரளாவில் பெரு வெள்ளம் காரணமாக சுமார் 417 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 8.69 லட்சம் பேர் மாநிலம் முழுக்க அமைக்கப்பட்ட 2,787 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இதனால் கேரள மக்களுக்கு பல இடங்களிலிருந்து உதவிகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் Google.org மற்றும் Googlers சார்பில் 1 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் 7 கோடி) கேரளாவுக்கு வழங்கப்படும் என கூகுள் தெற்காசியா மற்றும் இந்தியாவுக்கான துணை தலைவர் ராஜன் ஆனந்தன் தெரிவித்தார்.
.@Googleorg and Google employees are contributing $1M, to support flood relief efforts in Kerala and Karnataka. #GoogleForIndia@RajanAnandan
— Google India (@GoogleIndia) August 28, 2018
கேரள வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களுக்கு உதவியாக கூகுள் பேரிடர் மீட்பு குழு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில் கூகுள் பெர்சன் பைன்டர் டூல் ஆக்டிவேட் செய்யப்பட்டு இதுவரை 22,000 பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆனந்தன் தெரிவித்தார்.
மேலும் கடந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு ஏழு கோடி ரூபாய் அறிவித்திருந்தது. அதுமட்டுமின்றி மைக்ரோசாப்ட் குழுமத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் 4.20 கோடி ரூபாய் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.