வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு சிறிலங்கன் விமான நிறுவனம் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.உலகின் புகழ்பெற்ற வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதற்காக, புதிய Ready to Fly திட்டத்தையே குறித்த நிறுவனம் இவ்வாறு அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள அதன் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மேம்படுத்துவதற்காக, விமான சேவை பயணிகளிடம் தங்களுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
அதற்கமைய, புறப்பட வேண்டிய நேரத்திற்கு குறைந்தது 40 நிமிடங்களுக்கு முன்னர் புறப்படும் நுழைவாயிலுக்கு வருகை தந்து உதவுமாறும், அப்படி வருகை தந்து Ready to Fly (பயணிக்க தயார்) சேவையை பெற்றுக் கொள்ளுமாறும் தனது வாடிக்கையாளர்களிடம் சிறிலங்கன் விமான நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
பயணிகள் சேவை தொடர்பில் வழங்கிய கோரிக்கையின் விளைவாக இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் நேரத்திற்கு சமுகமளிக்க வேண்டும் என்பதே பயணிகளிடம் கேட்டுக்கொள்ளப்படும் முக்கிய கோரிக்கையாகும் என நிறுவனம் கூறியுள்ளது.
விமானம் தனது பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர், விமானப் பயணக் குழு அனைத்து விடயங்களிலும் கடினமாக பணியாற்றுகிறது. திட்டமிடப்பட்ட முறையில் புறப்படுவதற்காக உரிய நேரத்திற்கு முன்னதாக விமானத்தின் கதவுகளை மூடுவதோடு, விமானம் பயணிக்கத் தயார் என உறுதிப்படுத்தப்படுகிறது.
Ready to Fly என்ற இலக்கை அடைய, விமானம் புறப்படும் நேரத்திற்கு 20 நிமிடங்கள் முன்பு கண்டிப்பாக நுழைவாயில்களில் மூடப்படும்.
இந்த நேரத்திற்குப் பிறகு வரும் எந்தவொரு பயணிகளும் விமானத்தில் பறக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள், அவர்களது பொதிகள் விமானத்தில் இருந்து அகற்றப்படும்.
இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே விமான நிலையத்திற்கு வருகை தருமாறு விமான நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.