புதுடெல்லியில் 6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பள்ளி வாகன ஓட்டுனர் மீது போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் சமீப காலங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசும், பல்வேறு சமூக அமைப்புகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டம் இயற்றப்பட்டதற்கு பிறகு, சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குற்றங்கள் அளவு அதிகரித்துக் கொண்டு வருவதாகவே தெரிகிறது.
இந்நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள பளாம் கிராமத்தில் இயங்கும் தனியார் பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுமியை, பள்ளி வாகன ஓட்டுனர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக நேற்று காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குற்றவாளி மீது போக்ஸோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, வாகன ஓட்டுனரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடரும் இதுபோன்ற சம்பவங்களால் சிறுமிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.