இந்திய செய்திகள்:பேஸ்புக்கில் பழகிய பெண்ணை நம்பி சென்ற இளைஞரை மிரட்டி பணம் மற்றும் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தனசேகரன் என்பவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு பேஸ்புக் வாயிலாக திருமணம் ஆன பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கணவர் வீட்டில் இல்லாததால் தான் மட்டும் தனியாக வசித்து வருகிறேன் என்றும் கூறிய அப்பெண் வீட்டிற்கு வந்தால் ஜாலியாக இருக்கலாம் என்று தனசேகரனுக்கு ஆசைக் காட்டியுள்ளார்.
இதனை நம்பிய தனசேகரன் சென்றுள்ளார். அப்போது தனசேகரனிடம், தன்னால் வர முடியவில்லை ஆகையால் தன்னுடைய தம்பியை அனுப்பி வைக்கிறேன். அவருடன் வீட்டுக்கு வந்துவிடுங்கள் என்று அந்தப்பெண் கூறியுள்ளார்.
அந்த பெண் கூறியபடியே தனசேகரனை சந்தித்த இளைஞர் ஒருவர் அவரை தனது அக்கா அழைத்து வரசொன்னார் எனக்கூறி தனது பைக்கில் அழைத்து சென்றுள்ளார்.
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தனசேகரனை அழைத்துச் சென்ற அந்த இளைஞர் அவரை மிரட்டி ஏ.டி.எம். கார்டு, இரகசிய எண் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டார்.
பின்னர் அவரது கணக்கில் இருந்து ரூ.83 ஆயிரத்து 500-ஐ எடுத்து கொண்டார். பின்னர், தனசேகரனை அங்கேயே விட்டுவிட்டு அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
பின்னர், தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த தனசேகரன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தனசேகரனுடன் பேஸ்புக்கில் பழகியவர் உண்மையிலேயே பெண் தானா? அல்லது பெண் போல் பேசி ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலா என பொலிசார் விசாரித்து வருகின்றனர்.