சுவிஸ் செய்திகள்:சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று தீ விபத்தில் சிக்கியதை அடுத்து 80 தீயணைப்பு வீரர்கள் போராடி நெருப்பை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
லூசெர்ன் நகரத்தில் உள்ள Reiden பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு மற்றும் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த Wiggertal தீயணைப்பு வீரர்கள் குழுந்துவிட்டெரியும் நெருப்பை கட்டுக்குள் கொண்டுவர முயன்றுள்ளனர்.
ஆனால் மேலும் உதவி தேவைப்பட்டதை அடுத்து பணியில் இருந்த மொத்த குழுவினரையும் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு பல மணி நேரம் போராடி நெருப்பை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இதில் மொத்தம் 80 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டபோது அந்த குடியிருப்பில் உள்ள குடும்பங்கள் எவரும் அப்போது இல்லை என தெரியவந்துள்ளது.
இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. குடியிருப்பு முழுவதும் பலத்த சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆனால் சேத மதிப்பீடு பின்னரே நடத்தப்படும் எனவும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ண என்பதும் விசாரணைக்கு பின்னரே தெரியவரும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.