மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வு நடவடிக்கையில் இதுவரை 111 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மன்னார் சதொச வளாகத்தில் கடந்த மூன்று மாத காலமாக முன்னெடுக்கப்படும் அகழ்வு நடவடிக்கையில் குறித்த மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் ஏழு மனித எலும்புக்கூடுகள் குழந்தைகளினுடையதென தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றில் பல உடற்கூற்று பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அதேவேளை, இன்று (வியாழக்கிழமை) 61ஆவது நாளாகவும் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்கின்றன.
விசேட சட்டவைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ஆகியோர் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மன்னார் சதொச வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் கட்டட வேலைக்காக மண்ணை அகழ்ந்த போது மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவ்விவகாரம் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, நீதவான் உத்தரவிற்கமைய கடந்த மே மாதம் முதல் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.