மூளை அறுவை சிகிச்சையின்போது சில கணங்கள் ‘உயிரிழந்த’ ஒரு பெண், தான் இறந்தபோது எப்படி உணர்ந்தார் என்பதை பிரித்தானிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விளக்கியுள்ளார்.
ஹாங்காங்கில் பிறந்து தற்போது லண்டனில் வசிக்கும் Michelle Ellman (25), தான் பதினொரு வயதாக இருக்கும்போது தனக்கு செய்யப்பட்ட மூளை அறுவை சிகிச்சை ஒன்றின்போது சில கணங்கள் தன் உயிர் உடலை விட்டுப் பிரிந்ததாகத் தெரிவித்துள்ளார்.
தான் கட்டிலில் படுத்திருந்தாலும் இறந்த உடன் கட்டிலை விட்டு சில அடிகள் உயரத்தில் மிதந்ததாக தெரிவிக்கும் Michelle, அந்த கணத்தை எண்ணிப்பார்க்கும்போது அது அமைதியளிக்கும் ஒரு தருணமாக இருந்தது என்கிறார்.
சாவைப் பார்த்து பயப்படுபவர்களை தைரியப்படுத்தும் Michelle, மரணம் அமைதியானது அதனால் பயப்பட வேண்டாம் என்கிறார்.
வாழ்க்கையின் முதல் 20 ஆண்டுகளுக்குள்ளாகவே 15 அறுவை சிகிச்சைகளை தனது உடலில் செய்துள்ள Michelle, தனது 11ஆம் வயதில் மூளை அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்படும்போது இந்த சம்பவம் நடந்தது என்கிறார்.
எனக்கு அது ஐந்து நிமிடங்கள் போல தெரிந்தாலும், உண்மையில் ஐந்து நொடிகள்தான் அந்த நிலையை அனுபவித்தேன்.
இது குறித்து பல ஆண்டுகள் நான் பேசவில்லை, ஏனென்றால் அது எனக்கு பைத்தியக்காரத்தனம் போல் இருந்தது என்கிறார் Michelle.
அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட தழும்புகளால் தனது உடலைக் குறித்து ஏற்பட்ட வெட்கம் காரணமாக தன்னை எப்போதும் மறைத்துக் கொண்டே வாழ்ந்த Michelle, இப்போதுதான் தைரியமாக வெளி உலகுக்கு தன்னை காட்டத் தொடங்கியுள்ளதோடு, தன் போல் வெட்கத்துடன் வாழ்வோருக்கு ஊக்கமளிக்கவும் தொடங்கியுள்ளார்.