வட மாகாணத்தில் யுத்தத்திற்கு முன்னர் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதிலும் தற்போது அந்த நிலை மாறியுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் வைத்து கொலைசெய்யப்பட்ட முல்லைத்தீவு – முறிகண்டி வசந்தநகரைச் சேர்ந்த கறுப்பையா நித்தியகலாவின் படுகொலைக்கு நீதிகோரியும் பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி – டிப்போ சந்திக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கிளிநொச்சி – பண்ணங்கண்டி பிரவுன் வீதிப் பகுதியில் நீர்ப்பாசன வாய்க்கால் பகுதிக்குள் இருந்து ஓகஸ்ட் 29 ஆம் திகதியான நேற்று முன்தினம் காலை இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
கிளிநொச்சி அறிவியல் நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிவந்த 32 வயதான கறுப்பையா நித்தியகலா என்ற பிள்ளையொன்றின் தாயாரே சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் கொலைசெய்யபட்ட பெண்ணுக்கு நீதி கோரியும் இன்று கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்த கண்டன போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசே ! பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய், பெண்களின் பாதுகாப்பிற்கான சட்டத்தை வலுவாக்கு! நித்தியகலா கொலையாளிகளை விரைந்து கைது செய், தாமதியாது நீதி வழங்கு, சட்டவிரோத போதை பொருள் பாவனையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர்.
கண்டன போராட்டத்தின் இறுதியில் டிப்போச் சந்தியிலிருந்து கிளிநொச்சி பொலிஸ் நிலையம் நோக்கிச் சென்ற ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கு பொலிஸ் மா அதிபருக்கான மகஜர் ஒன்றை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சரிடம் கையளித்தனர்.
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பெண்கள் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
யுத்தத்திற்கு முற்பட்ட காலப்பகுதியில் வடமாகாணத்தில் பெண்களின் பாதுக்காப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ள பச்சிலைப்பட்டி பிரதேசசபை உறுப்பினர் ஈஸ்வரன் தயாழினி, தற்போது அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று அச்சத்துடன் வாழ்வதாகவும் கவலை வெளியிட்டார்.