நீர் அருந்துவதற்காகச் சென்ற ஒரு யானைக் கூட்டம் பரிதாபகரமாக பலியாகிய சம்பவம் பொலநறுவையில் இடம்பெற்றுள்ளது.
பொலநறுவை தும்மோதர பூங்கா பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த யானைக் கூட்டத்திலிருந்த ஐந்து யானைகளும் நீர் அருந்துவதற்காக நீர் நிலைகலைத் தேடி அலைந்துள்ளதாகவும் இதனால் சேறு மிகுந்த பகுதியை நீர்நிலை எனக் கருதி அவற்றுள் இறங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு குறித்த பகுதியில் இறங்கிய யானைகள் சேற்றுச் சுரிக்குள் சிக்கி மீளமுடியாமற்போனதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இதன்காரணமாக பரிதாபச் சாவடைந்த குறித்த யானைகளின் சடலங்கள் தற்பொழுது வனவிலங்கு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.
இலங்கையில் சுற்றுலாப் பயணிகளை மிகவும் ஈர்த்த வனவிலங்காக உள்ள யானைகள் அண்மைக்காலங்களில் இவ்வாறான இயற்கை மற்றும் செயற்கைக் காரணங்களால் உயிரிழப்பது சூழலியலாளர்களிடையே கவலையைத் தோற்றுவித்துள்ளது.