திருநெல்வேலி மாவட்டத்தில் கருவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த டெய்லரான வேல்குமாருக்கும் உஷாவுக்கும் கடந்த 30-ம் தேதி பெரியோர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் நடந்துள்ளது.
தமிழ் முறைப்படி திருமணம் நடந்து முடிந்ததும் மணமக்கள் இருவரும் மணக்கோலத்திலேயே நேராக கருவநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்குச் சென்றார்கள்.
பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் இருவரையும் வாழ்த்தினார்கள். பின்னர் மணமக்கள், பள்ளியின் வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பாக ரூ.5001 அன்பளிப்பாக அளித்தார்கள்.
திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி ஊதாரித்தனமாக செலவு செய்பவர்களுக்கு மத்தியில், பின்னடைந்த கிராமத்தில் உள்ள பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்கிற சிந்தனையை விதைத்துள்ள மணமக்களை கிராமத்தினர் பாராட்டினார்கள்.
இந்த விவரம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்கள். இந்த கிராமத்தில் நீண்ட பாரம்பரியம் கொண்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பதை விடவும் ஆங்கில வழிக் கல்வி நிலையங்களில் சேர்க்கவே பெற்றோர் ஆர்வம் காட்டும் நிகழ்வு குக்கிராமங்களையும் விட்டு வைக்கவில்லை. அதனால் இந்தப் பள்ளியில் குழந்தைகளே இல்லாமல் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.