அமெரிக்க ஆய்வு நிறுவனத்திடமிருந்து உப ஒப்பந்தமொன்றை பெற்றுக்கொண்ட நிறுவனமொன்று வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் ஆய்வில் ஈடுபடவுள்ள நிலையில், அதனை சீன நிறுவனமென அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்நிலையில் இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில் திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. பனாமா நாட்டுக் கொடியுடன் இயங்கும் BGP Pioneer என்ற ஆய்வுக் கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ளது.
இலங்கையின் கிழக்குக் கரைக்கு அப்பால் அமைந்துள்ள JS5 மற்றும் JS6 ஆகிய பகுதிகளில் ஐயாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்குப் பயணம் செய்து, இந்தக் கப்பல் கடலடியில் உள்ள நில அதிர்வு அலைகளை ஆராயவுள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வளம் குறித்து ஆராய்வதற்காக Schlumberger என்ற எண்ணெய் வயல் சேவை நிறுவனத்தின் கிளை நிறுவனமான Eastern Echo DMCC உடன் மே மாதம் இலங்கையுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தது.
இலங்கையின் பெட்ரோலிய அமைச்சர் அர்சுனா ரணதுங்க மே மாதம் 30 ஆம் தேதி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கிழக்கின் கடலில் எண்ணெய் வள ஆய்வு மட்டுமல்ல, இராணுவ ரீதியான கடற்படை உறவையும் அமெரிக்கா பலப்படுத்தியிருக்கிறதென்பதையும் இலங்கையின் பெட்ரோலிய அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
Schlumberger என்ற எண்ணெய் வயல் சேவை நிறுவனம், தரவுகளைத் திரட்டி, அவற்றைப் பல்வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவுள்ளது. அதற்காக இரு பரிமான மற்றும் முப்பரிமான தரவுகளை அது திரட்டவுள்ளது.
இந்த ஆய்வுக்கு Eastern Echo DMCC நிறுவனம் ஐம்பது மில்லியன் டொலரை முதலிடு செய்யும் எனவும், பல்வேறு முதலீட்டாளர்களுக்கு தரவுகளை விற்பனை செய்து அந்தப் பணத்தை மீளப் பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை நடவடிக்கைகள் இலங்கை அரசுடன் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்க நிறுவனத்தின் துணை நிறுவனமான Eastern Echo DMCC என்ற நிறுவனம், மத்திய கிழக்கில் துபாயில் பதிவுசெய்யப்பட்டுள்ள நிறுவனமாகும்.
இதேவேளை, அமெரிக்கக் கடற்படையின் சிறப்பு படைப்பிரிவு அதிகாரிகள் குழு ஒன்று இலங்கைக் கடற்படைக்கு, கடந்த மாதம் திருகோணமலைத் துறைகத்தில் உள்ள இலங்கைக் கடற்படையின் பிரதான முகாமில் பயிற்சியளித்திருந்தது. அதனையடுத்து அமெரிக்காவின் USS Anchorage கப்பல் ஒன்று திருகோணமலைத் துறைமுகத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை வருகை தந்துள்ளது. சுமாா் தொள்ளாயிரம் அமெரிக்கக் கடற்படை அதிகாரிகளும் கப்பலில் வந்திருந்தனர்.
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்து, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலைத் துறைமுகத்திற்குச் சென்று பார்வையிட்டிருந்தார்.
ஈழத் தமிழர்களின் கடற்பரப்புகள் மற்றும் நிலங்களை, இந்தியச் சாா்பு நிலை நாடுகளான அமெரிக்கா. ஜப்பான், ஆகிய நாடுகளிடம் மைத்திரி- ரணில் அரசாங்கம் கையளித்து வருவதாக பார்வையாளர்கள் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டை உடைக்கும் நோக்கிலும் தமிழ்த்தேசிய அரசியலை பலவீனப்படுத்தும் வகையிலும் துாரநோக்குச் சிந்தனையுடன் இலங்கை அரசு என்ற கட்டமைப்பு செயற்படுவதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்