தான் காதலித்த பெண் நன்றாக வாழவேண்டும் என இளைஞன் ஒருவர் விஷேட பூஜை ஒன்றை நடத்தி முதியோர் இல்லத்துக்கு உணவளித்து மகிழ்ந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
யாழ். கரவெட்டியை சேர்ந்த இளைஞர் (23- வயது) ஒருவர் அவருடன் பாடசாலையில் ஒன்றாக படித்த பெண்ணை கடந்த 5 வருடமாக காதலித்து வந்த நிலையில் திடீரென பெண்ணின் வீட்டார் மாப்பிள்ளை பார்த்து விட்டனர்.
இந்நிலையில் குறித்த இளைஞரின் வீட்டு நிலையை கருத்தில் கொண்டும், குறித்த பெண்ணின் வீட்டாரின் நிலையை கருத்தில் கொண்டும் தாங்கள் இருவரும் திருமணம் செய்ய முடியாத சூழல் உள்ளதால் பிரிந்து விடுவோம் என பெண் சொல்ல குறித்த இளைஞனும் உங்கள் விருப்பம் என சம்மதம் தெரிவிக்க ஒன்றாக முடிவெடுத்து பிரிந்து விட்டனர்.
இதைத் தொடர்ந்து, இன்று குறித்த பெண்ணுக்கு வெளிநாட்டிலுள்ள நபரோடு இந்தியாவில் திருமணம் நடைபெற்ற நிலையில், குறித்த இளைஞர் அந்தப்பெண்ணின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என சிறப்பு பூஜை செய்ததுடன், முதியோர் இல்லத்துக்கு சென்று உணவளித்துள்ளார்.
இச்சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் காதல் தோல்விகளால், பிரிவுகளால் இளைஞர்கள் பெண்களையும் அழித்து, தங்களையும் அழித்துக்கொண்டு வழிமாறி செல்லும் நிலையில் குறித்த இளைஞனின் செயல் அனைத்து காதலர்களுக்கும் முன்மாதிரியாக உள்ளது என்றால் மிகையாகாது.