விடுதலைப் புலிகளின் கோரிக்கையான தனி ஈழத்தை எடுத்துக் காட்டும் வகையில் சுவாமிக்கு அலங்காரம் செய்தமை தொடர்பில், வாக்குமூலம் பெற்றுக்கொள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளனர்.
இருப்பினும் குறித்த கோரிக்கை சிங்கள மொழியில் முன்வைக்கப்பட்டமையால் அதனை நிராகரித்த பதில் நீதிவான் வழக்கை நவம்பர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
கடந்த ஜூன் மாதம் ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவில் வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தமிழீழ வரைபடத்தை ஒத்த அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் பயங்கரவாதவிசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதுதொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர்.
குறித்த வழக்கு விசாரணையானது இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இதன் போது “தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட தனி ஈழக் கோரிக்கையைக் குறிக்கும் வகையில் ஈழ வரைபடத்தை ஒத்த வகையில் ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் சுவாமி அலங்கரிப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. ஊடகவியலாளர் ஒருவர், இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலய பூசகர் ஆகியோரும் வாக்குமூலம் பெறப்பட்டது.
இந்த நிகழ்வு தொடர்பில் செய்தி வெளியிட்ட யாழ்ப்பாணத்தில் வெளிவரும் உதயன், வலம்புரி மற்றும் தினக்குரல் ஆகியவற்றின் ஆசிரியர்களிடம் வாக்குமூலம் பெறப்படவேண்டும். அதற்கான அனுமதியை மன்று வழங்க வேண்டும்” என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விண்ணப்பம் செய்தனர்.
அவர்களால் முன்வைக்கப்பட்ட எழுத்துமூல விண்ணப்பம் சிங்கள மொழியில் அமைந்துள்ளதால், அதனை ஏற்கமறுத்த பதில் நீதிவான், தமிழ் மொழியில் விண்ணப்பம் செய்யுமாறு அறிவுறுத்தினார்.