தன் மருமகன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை தான் நம்பவில்லை எனவும், தனது மருமகன் ஒரு அப்பாவி எனவும் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் மருமகனான 25 வயது முஹமட் நிஜாம்டீன் , ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அமைச்சர் பைஸர் முஸ்தபா மறுத்துள்ளார்.
அவுஸ்திரேலியா டெய்லி மெய்ல் என்ற செய்திசேவை இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் ஐ.எஸ் அமைப்பின் சார்பில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நிஜாம்டீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபத்தான தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் நிஜாம்டீன் கைது செய்யப்பட்டதாக அவுஸ்திரேலிய பொலிஸார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அமைச்சர் பைஸர் முஸ்தபா, தனது மருமகன் தவறு இழைத்திருக்க மாட்டார் என தமது குடும்பத்தினர் நம்புவதாகவும், நீதித்துறைக்கு மதிப்பு கொடுப்பதன் காரணமாக நீதித்துறையின் தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.